முறையான பராமரிப்பின்மை: கம்போடியா அழைத்துச் செல்லப்படும் பாகிஸ்தானில் உள்ள ஒரே ஆசிய யானை!

வனவிலங்குகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் மிக மோசமாக உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இருந்து வருகிறது. விலங்கு நலனைப் பாதுகாப்பதற்கான சட்டம் ஏதும் பாகிஸ்தானில் இல்லாததால் அங்குள்ள உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.  கடந்த 2018 ஆம் ஆண்டில், வடமேற்கு நகரமான பெஷாவரில் மூன்று பனி சிறுத்தை குட்டிகள் உட்பட ஒரு புதிய உயிரியல் பூங்கா திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள் ஒரே சமயத்தில் 30க்கு மேற்பட்ட வன விலங்குகள் அங்கு இறந்தன.

இதனிடையே 1985 ஆம் ஆண்டில் இலங்கையால் காவன் மற்றும் சாஹெலி என்ற இரண்டு ஆசிய யானைகள் பாகிஸ்தானுக்கு பரிசளிக்கப்பட்டன. இதில் சாஹெலி என்ற யானை கடந்த 2012 ஆம் ஆண்டு குடலிறக்கம் காரணமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து காவம் என்ற அந்த ஒற்றை யானை மட்டும் அங்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த யானை முறையாக பராமரிக்கப்படாததால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. இதனை கண்ட சர்வதேச விலங்குகள் ஆர்வலர் ஒருவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வனவிலங்கு பூங்காவின் மோசமான பராமரிப்பை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து விலங்குகளையும் வேறு பகுதிகளுக்கு மாற்ற அனுமதியளித்தது. 

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கவான் யானையை கம்போடியாவுக்கு கொண்டு செல்ல ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட விலங்கு நலன் மற்றும் மீட்புக் குழு ஃபோர் பாவ்ஸ் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது. அதன்படி 35 வயதான அந்த ஆசிய யானையை ஜம்போ” ஜெட் விமானத்தில் மூலம் சுமார் 25,000 ஏக்கர் உள்ள கம்போடிய வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதனை அடுத்து யானையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த வனவிலங்கு ஆர்வலர்கள் யானைக்கு முறையான உணவு கொடுத்து மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். மேலும் காவன் யானையின் நிலையை கண்காணிக்க அதன் தோல்பட்டையில் மைக்ரோசிப்பையும் ஆர்வலர்கள் பொருத்தியுள்ளனர். 

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கை வென்ற வழக்கறிஞர் ஒவைஸ் அவான், இந்த வாரம் யானை கால்நடைகள் மற்றும் தன்னார்வலர்கள் அவருடன் பணியாற்றியதால் மகிழ்ச்சியாக தோன்றியது. நான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் இதுவரை அந்த யானையின் விரிவான மருத்துவ சிகிச்சை குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. பொதுவாக இங்கு மிருகக் காட்சி சாலையில் உள்ள யாருக்கும் விலங்களை பராமரிக்கத் தேவையான பயிற்சிகள் வழக்கப்படுவதில்லை. இதனால் விலங்குகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.