முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்!

உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த 6 வருடங்களாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி ஜஸ்வந்த் சிங் உயிரிழந்தார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு, பாதுகாப்பு, மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 

அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் ட்விட்டரில்,

“நாட்டின் ராணுவத்தில் சேவைபுரிந்து, பின்னர் அரசியலில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை திறம்பட கையாண்டு, பணியாற்றிய துறைகளில் முத்திரை பதித்தவர். ஜஸ்வந்த் சிங்கின் தனித்திறைமையால் என்றைக்கும் அவர் நினைவில் கொள்ளப்படுவார். பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.” என்று பதிவிட்டுள்ளார்.   

அவரது மறைவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், ஜஸ்வந்த் சிங்கின் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் போது நாட்டிற்கு சிறந்த சேவையாற்றியுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.