மீண்டும் எண்ணப்படுமா மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் ? – நீதிமன்றின் உத்தரவு

கடந்த பொதுத்தேர்தலின் போது மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி மேன்முறையிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போது மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லக்கல மற்றும் தம்புள்ளை தேர்தல் தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் சந்தர்ப்பத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் மாத்தளை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து விருப்பு வாக்குகளும் மீண்டும் எண்ணப்படவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.