மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு இன்று இரண்டு வருடங்கள் நிறைவு

  • நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

இந்த தினத்தை இலங்கையர்கள் மட்டுமல்ல முழு உல மக்களும் அத்துணை இலகுவில் மறந்துவிட முடியாது.

இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட பிரசித்தியான இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் (21) இரண்டு வருடங்கள் ஆகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதல்களில் உயிர்நீத்தவர்கள் மற்றும் காயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைவருக்குமான பிரதான திருப்பலி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ள விசேட திருப்பலி ஒப்புகொடுத்தல் மற்றும் ஆராதனை நிகழ்வுகளில் சர்வ மத தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 03 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்டத்திர ஹோட்டல்கள் 03 உள்ளிட்ட 07 இடங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் 260 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.

சிறு குழந்தைகள், பெண்கள், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அடங்கலாக 503 பேர் கடுமையாக காயமடைந்ததுடன் பலர் அங்கவீனமுற்றனர்.

இன்று போன்தொரு நாளில் இறையாசி வேண்டி சென்று போது, இறையடி சேர்ந்தவர்களுக்கும் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து, பாதிப்புக்குள்ளான அனைவருக்காகவும் நாமும் பிரார்த்திக்கின்றோம்.