மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை

மியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தடை பாரபட்சமானது என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான இனப் படுகொலையின் ஒரு தொடர்ச்சி எனவும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

2017ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து, சுமார் 75 ஆயிரம் ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். இந்த விரட்டியடிப்பு நடவடிக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இனப் படுகொலை விசாரணைக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், மியான்மார் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் பயங்கரவாதிகளை வேரறுக்கும் முகமாகவே இராணுவ நடவடிக்கை இடம்பெற்றது என நியாயப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மேலும் 6 இலட்சம் ரோஹிங்கியர்கள் மியான்மாரில் இருக்கிறார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டு குடிமக்களாக கருதப்படுவதில்லை.

இந்நிலையில், மூன்று ரோஹிங்கியர்கள் தலைமையிலான கட்சிகள் நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தலில் குறைந்தது ஒரு டசின் வேட்பாளர்களை நிறுத்துவதாக தீர்மானித்திருந்தன.

ஆனால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கட்சியின் உறுப்பினர் அப்துல் ரஷீத், மியான்மாரின் எதிர்வரும் தேசிய தேர்தல்களில் பதவிக்கு போட்டியிடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.