மின் தடைக்கான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

நாடு முழுவதும் அண்மையில் மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.

தவறுதலான செயற்பாட்டின் காரணமாக மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த குழு நேற்று முன்தினம் பத்தரமுல்லை – பெலவத்தையிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

இதனையடுத்து இறுதி செய்யப்பட்ட குறித்த அறிக்கை அமைச்சர் அழகப்பெருமவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் செவ்வாய்க்கிழமையிலிருந்து மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.