மாத்தளை ஹொக்கி மைதானத்தை சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- நாமல் ராஜபக்ச

மாத்தளை ஹொக்கி மைதானத்தை 50 மில்லியன் ரூபாய் செலவில் சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால், மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் நேற்று (16)  அம்மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, விளையாட்டு, பாடசாலை விளையாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளின் வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் குறித்த கூட்டத்தில், அகுரம்பொடா மத்திய மகா வித்தியாலயம் (விளையாட்டு பாடசாலை) முதல் கட்டத்தை  7.7 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது இவ்வாண்டின் இறுதியில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோன்று, மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் 55 பாடசாலைகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஒரு விளையாட்டு மைதானம் எனும் அடிப்படையில் 11 விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 50 மில்லியன் ரூபாய்  செலவில் மாத்தளை ஹொக்கி மைதானத்தை சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மாத்தளை மாவட்டத்தில் 30 வெளிப்புற உடற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.