மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டம்

கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்திலுள்ள பாடசாலை, கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே பாடசாலைகள் திறக்கப்படும் வரை மாணவர்கள் அனைவருக்கும் உலர் உணவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ஆம்  திகதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

இதனிடையே கொரோனோ வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றமையினால்  நாடு முழுவதும் ஆறாம் கட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் எதிர்வரும் 31ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் நவம்பர் மாதமளவிலேயே திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.