மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் கடிதம்!

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5  ஆம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லேசான  தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, தொற்றின் பாதிப்பு  தீவரமடைந்தது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 


இதனிடையே செப்டம்பர் 7ஆம் தேதி அவருக்கு கொரோனா நெகடிவ்  வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் எக்மோ மற்றும்  வென்டிலேட்டர், பிசியோதெரபி, வாய்வழி திரவங்களுடன் உணவு  கொடுக்கப்படுவதாகவும் அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு  வெளியேற ஆர்வமாக உள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், திரையுலகத்தினர்  ரசிகர்கள் என பலரும் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர். 


இதனை தொடர்ந்து இசை உலகுக்கே மிகப்பெரிய பங்களிப்பை செய்த  எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌவுரவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதியுள்ளார்.


அதில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த இசை ஜாம்பவானான எஸ்.பி  பாலசுப்ரமணியம் கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் பாடலுக்கு  இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சுமார் 50  ஆண்டுகளாக இசையுலகில் சாதனைப் படைத்துள்ள அவர், தாய்மொழி  தெலுங்கு தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் இந்த  சாதனைக்காக 6 ஃபில்ம்ஃபேர் விருதுகளும் பத்மபூஷன் மற்றும்  பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 


எனவே லதா மங்கேஷ்வர், எம்.எஸ் சுப்புலட்சுமி, பீஷ்மன் ஜோஷி, பூபென்  ஹசாரிகா உள்ளிட்ட இசை ஜாம்பவான்களுக்கு நாட்டின் உயரிய விருதான  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை போலவே பாடகர்  எஸ்.பி பாலசுப்ரமணியத்துக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌவுரவிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.