மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் வலியுறுத்தினர்

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தற்போது வரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்காத நிலையில், திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மசோதாவை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர். ஆளுநரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்ததாகவும், விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.


ஆளுநருடன் உடனான சந்திப்புக்கு பின்னர், பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆளுநர் உடனான சந்திப்பு, உள் ஒதுக்கீடு தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துகள் மற்றும் ஆளுநர் தெரிவித்த கருத்து ஆகியவை குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர்.