மனங்கொண்ட மண்..

அதிகாலைப் பனிப்புகாரின்

போர்வைக்குள் பூத்திருக்கும்

மனங்கமழும் பூவிதழை

பனித்துளிகள் அலங்கரிக்க

கங்குலவள் காரிகையும்

விடைபெறும் நேரம்

கீழ்த்திசையோன் கிளர்ந்தெழுந்து

கமலமதை முத்தமிட

புலரும் வைகறைப் பொழுதினிலே

புவியெங்கும் பொழிந்திடும்

எழில் மிகுந்த கோலம்

ஞாலத்தில் மேவும்

மலையிடத்தே துயில்கின்ற

பசுந்தென்றல்

தோட்டங்களிடை தூதுரைக்க

சில்லென்ற காற்று

தேகம் தொடுகையிலே

சொல்ல முடியா 

சுகம் தோன்றும்

விழிவிரியும் எல்லைவரை

பசுஞ்சேலை போர்த்திருக்கும்

மருதப்பெண்

விளைத்திருக்கும் நிறைமணியும்

கரைளோடு கதைபேசும்

ஆற்றின் ஒலியும்

காற்றிலாடும் நாற்றின்

ஓசையும் மதிமயக்கும்.

பூச்சொரியும் மரங்களதை

கண்கள் சுவைக்க

எட்டும் திக்கும்.

எழில் ஓங்கும்

மனங்கொண்ட மண்ணிலே

மலர்ந்திட்ட வனப்பு

கலைவடிவம் கொடுக்க

மதுவின்பமாய் புதுவின்பம் கூடும்.