மத்திய அரசு கொரோனா நெருக்கடியை கையாள்வதில் திறம்பட செயற்படவில்லை – ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

தொடர்ச்சியாக தனது ருவிட்டர் பதிவில், மத்திய அரசை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவால் ஏனைய நாடுகளைவிட இந்தியா சிறப்பான நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளில் அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே இந்தியாதான் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புள்ளிவிபரத்தினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 28ஆம் திகதி புதிய கொரோனா பரிசோதனை மையங்களை திறந்துவைத்தபோது பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். அதுவரை நாள் முழுவதும் ஏறத்தாழ 45 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் என்ற அளவில் கண்டறியப்பட்டது. ஆனால் ஜூலை 30ஆம் திகதி முதல் இந்த எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.