மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைக்க ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்க பிரதமர் ஆலோசனை!

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.30 பிற்பகல் தெரிவித்தார்.மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அரசியல் அழுத்தம் காரணமாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்தி, தகுதியான அதிகாரிகளுக்கு மட்டும் இடமாற்றம் வழங்குமாறு அறிவுறுத்தினார்.அதன்படி, நலன்களை அனுபவிக்கும் இடங்களில் பணிபுரியும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளை இடமாற்ற நடைமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்த்ரி, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம, தலைமை மதுவரி பரிசோதகரும் மதுவரி சோதனை சங்கத்தின் பிரதான தலைவருமான நிமல்சிறி ஹேமந்த, மதுவரி சோதனை சங்கத்தின் பிரதான செயலாளர் திஸ்ஸ ராஜபக்ஷ உள்ளிட்ட மதுவரி தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.