மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை விளக்குத்தூண் பகுதியில் பைசர் அகமது எனபவருக்கு சொந்தமான ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை தீ பற்றி எரியத் தொடங்கியது. பின்னர் பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென பரவியதால் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

மதுரையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயன்றபோது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட தீயணைப்புத்துறை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.