போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார்.
இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வடக்கில் யாழ் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி யாழ் மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு ஐநாவுக்கு கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம்.


அதேபோன்று கிழக்கிலும் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையளிக்கவுள்ளோம்.
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இருந்தும் எமது பிள்ளைகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கட்சி பேதமின்றி எமது உறவுகளிடம் கேட்டு நிற்பது எமக்காக குரல் கொடுங்கள் எனவும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள் எனவும் கேட்டுகொண்டுள்ளார்..