“பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக்கொடுத்தால் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கலாம்” – உத்தரபிரதேசம் எம்.எல்.ஏ

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயது பட்டியிலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் அவரிடம் உத்தரபிரதேச அரசை ராம ராஜ்ஜியம் என்று கூறுகிறீர்கள் ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த சுரேந்திர சிங், அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச்செயல்களை தடுக்க முடியாது என்று கூறினார்.  

மேலும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும் என்றார். அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செயல்பட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு அரசு எப்படி அதன் மக்களை காக்க வேண்டுமோ அதைப்போல பெற்றோர்களும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரம், நல்ல பண்புகளுடன் சேர்த்து அடக்கமாக பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நிர்பயா சம்பவத்தைப் போலவே ஹத்ராஸ் சம்பவத்திலும் பெண்களின் குணத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், அதுவும் ஆளும் பாஜக எம்.எல்.ஏ ஒருவரே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையின் பரபரப்பு அடங்குவதற்குள், உத்தர பிரதேச மாநிலம் அலிகர் நகரில், உள்ள கிராமம் ஒன்றில் 4 வயது சிறுமி தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 32,033 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.