பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என வரிசையாக பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கும் கடந்த வாரம் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

தற்போது பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில் தான் அமித்ஷாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 29ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் போன்ற அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் அக்கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.