பூவரசங்குளம் பேரூந்து நிறுத்தும் நிழற்குடை சீரின்மையால் மாணவர்கள் அசௌகரியம்

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேரூந்துக்காக காத்திருக்கும் நிழற்குடை சிதைவடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதனால் மழைகாலத்தில் பாடசாலை மாணவர்களும் பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களை முகம்கொடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான வீதியில் பூவரசங்குளம் சந்தியில் அமைத்திருக்கும் நிழற்குடையே இவ்வாறு சிதைவடைந்து காணப்படுகின்றது.
கடந்த பலவருடங்களாக இவ்வாறு சிதைவடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்தில் நாளொன்றுக்கு சுமார் 300 வரையான மாணவர்களும் 150ற்கும் மேற்பட்ட கிராமத்து பயணிகளும் இந்த தரிப்பிடத்திலேயே மழைக்கு ஒதுங்கும் நிலை காணப்படுகின்றது.
கோவில்புளியங்குளம் , செங்கற்படை,வேலங்குளம்,சின்னத்தம்பனை,மடுக்குளம் ,சிவநகர் ,தந்தங்குளம் , குருக்களூர்,  கண்ணாட்டி ,செட்டிகுளம் , தட்டாங்குளம் , சண்முகபுரம் ,  உற்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கிராமவாசிகளும் பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக குறித்த நிழற்குடையையே நம்பியுள்ளனர் .
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த குறித்த நிழற்குடையை சீர்படுத்தி தருமாறு பல்வேறு அரச அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .