பூமித்தாய் அழுகிறாள்!

பேராசை கொண்ட
சுரண்டல் வர்க்கமே
உயிர் யாசகம் வேண்டி
கண்ணீரைப்
பெய்து கொண்டு இருக்கிறேன்

உங்களது சூழலை
சுரண்டும் புத்தியால்
மலையின் தோல்களும்
அவிழ்ந்து விடுமோ
என அஞ்சுகிறேன்

பச்சைத் தளிர்க்கரத்தால்
கானகங்கள் துளிர்க்கத்
தொடங்கையிலே
வெட்டி எடுத்தால்
வெற்றி கொள்ள முடியுமோ?
பாலை நிலங்களை.

காற்றில் ஒலிக்கும்
சலங்கை ஓசையுடன்
பயணிக்கும்
நதிப் பெண்ணையும்
ஏப்பம் விடுகிறீர்

வானத்தின் மூச்சுத்திணறலால்
வானவில்லும்
வர்ணங்களற்று
வெளிறிப் போய்விடுமோ?

பற்றி எரியும் காடுகளாய்
இடிந்துவிழும் பாறைகளாய்
சுழன்றடிக்கும் சூறாவளியாய்
அலைகளின் ஓலங்களாய்

இன்னும்
எத்தனை எத்தனை
வடிவில் என்
அங்கங்கள்
அங்கலாய்ப்பது
புரியவில்லையா?

கலைத்துப்போன கனவுகளுடன்
வாழ்தலின் விளிம்பில் நழுவி
கொத்தாய் மடியும்
உயிர்கள்
சாபத்தின் தீர்ப்பு நகலோ?