புற்றுநோய் வைத்திய சிகிச்சை பிரிவை மத்திய அரசு கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது!! சத்தியலிங்கம்

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்தியசிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சியானது 13 வது திருத்தச்சட்டத்தினை ஒழிக்கும் செயற்பாடாகவே பார்க்கமுடியும் என்று முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்….
தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய் வைத்திய சிகிச்சைபிரிவு மற்றும் உளநலவைத்தியப்பிரிவினை, மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுனர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது. அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ்போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது.

இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அதிகாரபரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 
அந்தவகையில் 13 வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வை மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும். போதனா வைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கவேண்டும் என்று 13வது திருத்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் விசேட பிரிவுகளே தவிர தனியான வைத்தியசாலைகள் அல்ல.


மாகாணசபையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் படி பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இந்த இரண்டு பிரிவுகளும் மாகாணசபையினுடைய ஆளுகைக்கு கீழே இயங்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரு பிரிவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சட்டரீதியாக மக்கள் பிரதிநிகளால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையில் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டத்தினை, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் மக்கள் விரோதமான முறையில் கையகப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது. 
அவற்றை நடாத்தக்கூடிய நிதி மாகாணசபைகளிடம் இல்லை என்றே காரணம் கூறப்படுகின்றது. மாகாண நிர்வாகத்திடம் அவ்வாறு நிதி நெருக்கடி இருக்குமானால் விசேட நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதற்கு வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அத்துடன் இந்த இரு பிரிவுகளிலும் பணப்பற்றாக்குறை காரணமாக சரியான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் எவையும் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை. எனவே இது 13 வது திருத்தச்சட்டத்தினை இல்லாமல் ஒழிக்கவேண்டும் என்ற செயற்பாடாகவே பார்க்கமுடியும்.அதன் முதற்படியே இது. 
இதேவேளை வடக்கில் யாழ்மாவட்டத்தினை தவிர ஏனைய நான்கு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பொதுவைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் நம்பகமாக அறிகிறோம். இவ்வாறான செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இதற்கு எதிராக நிச்சயம் நாங்கள் குரல் கொடுப்போம் என்றார்.