புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்

கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த பதவியேற்வு வைபவம் இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை அறிக்கைக்கு இணங்க நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் ஆகியன குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் 28 அமைச்சுகளில், பாதுகாப்பு, நிதி, புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி, நீதித்துறை, வெளிவிவகாரம், பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, கல்வி, சுகாதாரம், தொழில், சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு, விவசாய வேளாண்மை, நீர்ப்பாசனம், காணி, மீன்வளம், பெருந்தோட்டம், நீர்வழங்கள், மின்சாரம் ஆற்றல், நெடுஞ்சாலை, போக்குவரத்து, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, சுற்றுலா வர்த்தகம் தொழில் மற்றும் ஊடக அமைச்சுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.