புதிய அமைச்சரவையை 25 முதல் 28 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையை 25 முதல் 28 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 வது திருத்த சட்டத்திற்கு ஏற்ப 30 அமைச்சர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய அமைச்சரவையை 25 முதல் 28 வரை மட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர் என பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டால் ஒரு அமைச்சருக்கு கீழ் பல அமைச்சரவை பதவிகள் வழங்க வாய்ப்புள்ளது.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சையும் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என அக்கட்சியின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு களனி ராஜமஹா விகாரையில் பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது