பீகாரில் 3ம் கட்ட தேர்தலுக்கு தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ராகுல் காந்தி!

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பீகாரின் சஜர்சா பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள் காங்கிரசை தண்டிப்பதாக அவர் கூறினார். பாரத மாதாவுக்கு ஜே என சொல்லாதவர்களுக்கு, தேர்தலில் உரிய பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மக்களை நீண்ட நாட்கள் முட்டாளாக வைத்திருக்க முடியாது என்றும் பிரதமர் மோடி சாடினார். 

பீகாரின் கடிஹாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பீகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான தொழிலாளர்களை பசியுடனும், தாகத்துடனும், நடந்தே வீடு திரும்ப வைத்தவர்கள், தற்போது மக்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்வதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், பீகாரில் அமையும் காங்கிரஸ் கூட்டணி அரசு, ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் அரசாக இருக்கும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார். 

இதற்கிடையே, ஹர்லாகி என்ற தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், நிதிஷ் மீது வெங்காயத்தை தூக்கி வீசினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.