பீகாரில் ஆட்சியை தக்கவைத்தது தேசிய ஜனநாயக கூட்டணி!

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 7ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தன. பின்னர் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நேற்று காலை தொடங்கி, இன்று அதிகாலை வரை நீடித்தது. தேர்தல் முடிவுகளின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெறுபவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எந்த ஒரு தனிக்கட்சியும் 122 இடங்களில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 74 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களில் வெற்றியடைந்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி  ஆகிய கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரி கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கிடையே, பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் ஐக்கிய ஜனதா தள அலுவலகங்களில் அக்கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 5 கட்சிகள் இணைந்து உருவாக்கிய மூன்றாவது அணியில் அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 5 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. பகுஜன் சமாஜ், லோக் ஜன்சக்தி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதேபோல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.