பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையானார்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவினால், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 3ஆம் திகதி ஏற்கனவே முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு இணங்க இன்று அவர் மீண்டும் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.