பிளாஸ்டிக் கழிவுகளை விரைவில் அழிக்கும் புதிய தொழில்நுட்பம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!


உலக வெப்பமயமாதலால் ஏற்கனவே பூமியில் பெரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு என்பதும் புவிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு முக்கிய காரணமாக மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உருவெடுத்துள்ளன. ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை நிரம்பியுள்ள இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்கள் மட்டும் மனித வாழ்வுக்கு பெரும் கேடு விளைவித்து வருகிறது.

இதனிடையே இந்த சூழலியல் விபரீதத்தை தற்போது உணர்ந்துள்ள உலக நாடுகள், இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பல ஆண்டுகாலம் மண்ணில் மக்காமல் இருக்கும் இந்த கழிவுகளை அழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளை நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மண்ணில் மக்க பல ஆண்டுகள் ஆகும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சில ஆண்டுகளிலேயே மக்கவைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். இது இயற்கையாக மண்ணில் உள்ள நொதிக்கும் திறனை காட்டிலும் அதிவேகமாக நொதிக்கும் காய்டெய்ல்களை (cocktail) கொண்டுவந்துள்ளனர். இது சில நாட்களிலேயே பிளாஸ்டிக் கழிவை குறைக்கும்.
 

இந்த காக்டெய்லில் உள்ள நொதிகளில் PETase மற்றும் MHETase ஆகியவை உள்ளன. அவை பிளாஸ்டிக் பாட்டில்களில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பி.இ.டி வகை பிளாஸ்டிக்கை உண்ணும் ஒரு வகை பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகின்றன.

இது குறித்து தெரிவித்துள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்கீஹான், இந்த நொதி தற்செயலாக 2018 ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் இயற்கையாக கிடைக்கும் நொதிகளில் நொதித்தல் செயல்பாடு மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால், குழுவின் ஆராய்ச்சியாளர்கள் இந்த செயல்முறையின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு முறையை மேற்கொண்டதாக தெரிவித்தார். 

அது என்னவென்றால் காக்டெய்லில் உள்ள “PETase நொதிகள் பிளாஸ்டிக்கின் மேற்பரப்பைத் தாக்குகிறது மற்றும் MHETase பிளாஸ்டிகின் உட்பரப்பை அதிகம் சிதைக்கிறது. எனவே அந்த இரண்டையும் இணைத்து முயற்சிக்க முடிவு செய்தோம். ஆனால் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இயற்கையாக உருவான தனி நொதிகளை விட எங்கள் புதிய சைமெரிக் நொதி மூன்று மடங்கு வேகமாக இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். எனவே பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க நாங்கள் புதிய வழிகளைத் திறக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.