பிரிட்டனில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வீசுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன: நிபுணர்கள் எச்சரிக்கை!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இதனை அடுத்து அந்நாடு மேற்கொண்ட துரிதமான பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு மே மாதத்துக்கு பின்னர் நோய் பாதிப்பு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனை தொடந்து ஜூன் மாதம் முதல் அந்நாட்டின் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூட்டமாக 6 பேருக்கும் மேல் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பெரும்பான்மையான ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு கடந்த ஒருவாரமாக மீண்டும் வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 3,65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41,623 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பரிசோதனை மருத்துவ பேராசிரியரும் நிபுணருமான பீட்டர் ஓபன்ஷா, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அதிவேகமாக பாதிப்பு வளர்வதைத் தடுக்க நாம் இப்போது மிக விரைவாக செயல்பட வேண்டும். அதுதான் முக்கிய அம்சம், நாம் வேகமாக செயல்பட வேண்டும், ஏனென்றால் இந்த வகையான விஷயங்களை சில நாட்கள் தாமத்தப்படுத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம் என தெரிவித்தார். அவ்வாறு கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனாவின் இரண்டாம் அலையை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்தார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ளஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரெஜியஸ் மருத்துவப் பேராசிரியரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் உறுப்பினருமான சர் ஜான் பெல், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருந்தாலும் நாங்கள் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் விழும்பில் இருக்கிறோம். நிச்சயமாக கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தடுப்பு மருந்துகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு இருப்பினும் இரண்டாம் அலையில் முடிவுக்குள் தடுப்பு மருந்து வரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.