பிரான்ஸில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா, ஐசியுவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கபட வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். சமீபத்திய தொற்று பரவலை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவை எதிர்த்து போராட வேறு வழிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த வாரம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மாதத்திற்கு 1500 முதல் 2000 பேர் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். அடுத்த 15 நாட்களில் பாதிப்பு அதிகரித்தாலும், பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் இளைஞர்கள் மத்தியிலே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,17,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,724 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.