பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன்படி, முதற்கட்டமாக கடந்த ஜூலை 28-ல் ஐந்து விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அவை, இந்திய விமானப்படையில் செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. 


தற்போது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸில் இருந்து இன்று காலை புறப்பட்டு, மாலையே இந்தியா வந்தடைய உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 3 விமானங்களும் விமானப் படையில் இணைக்கப்பட்டால் 8 ரஃபேல் விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும். ஏற்கனவே, இந்தியா வந்த 5 ரஃபேல் விமானங்கள், பதற்றமான சூழல் நிலவி வரும் லடாக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.