பிரான்சில் குடும்ப வன்முறை – இலங்கையர்கள் ஐவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!

பிரான்சின் கிழக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியான Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (03) காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கொல்லப்பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள் எனவும் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு இலக்கான ஒரு சிறுவன் இரத்தக் காயங்களோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து வெளியேறி அருகிலுள்ள மதுச்சாலை ஒன்றுக்குச் சென்று உதவி கோரியுள்ளார்.

‘எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்’ என குறித்த சிறுவன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றிருந்த போது வீட்டின் கதவுக்கு உள்பக்கமாக தாழிட்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதையடுத்து, தடுப்பினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த பொலிஸார் மேலதிக வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுத்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்த ஐவரில் மூவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், தாக்குதல் நடத்தியவர் மீட்பு நடவடிக்கையின் போது கோமா நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தி, சுத்தியல் போன்றவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.