பிரபாஸ் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரம்? இயக்குனர் பதில்!

Amitabh Bachchan gives 45 days to Prabhas' film

பிரபாஸ் நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சன் கௌரவ வேடத்திலேயே நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதை மறுத்துள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின்.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் சிறப்புத் தோற்றத்தில் ஒரு சிறு வேடத்திலேயே நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதைப் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மறுத்துள்ளார். அவர் ‘இந்த படத்தின் தலைப்பையே முதலில் அமிதாப் கதாபாத்திரத்தின் பெயராகதான் வைக்க இருந்தோம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். உங்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவோம் அமிதாப் சார்’ என கூறியுள்ளார்.