முன்னணி நடிகர் ஒருவரின் கார் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திரைப்பட நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வுதான். அப்படி வாங்கும் கார்களை குறிப்பிட்ட காலம் மட்டும் பயன்படுத்தி விட்டு, பின்னர் விற்பனை செய்து விடுவதை திரைப்பட நட்சத்திரங்கள் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். புதிய கார்களை வாங்குவதற்காக, ஏற்கனவே பயன்படுத்திய கார்களை அவர்கள் விற்பனை செய்து விடுகின்றனர்.

இதனால் திரைப்பட பிரபலங்கள் பலரின் கார்கள், அவ்வப்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு வரும். இந்த வகையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஷாருக்கானின் சொகுசு கார் ஒன்று தற்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் வசூல் மன்னர்களில் ஒருவரான ஷாருக்கான், பிஎம்டபிள்யூ கார்களின் மிகப்பெரிய ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அவர் வீட்டில் நிற்கும் ஏராளமான கார்கள் பிஎம்டபிள்யூ லோகோவை தாங்கியுள்ளன. பிஎம்டபிள்யூ சொகுசு கார்களில் பயணம் செய்வதென்றால், ஷாருக்கானுக்கு மிகவும் பிடிக்கும்.

எனினும் புதிய கார்களுக்கு இடம் அளிப்பதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு பின் பழைய கார்களை அவர் விற்பனை செய்து விடுவார். இந்த வகையில் தான் சொந்தமாக வைத்திருந்த பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் ஒன்றை சில காலத்திற்கு முன்பு ஷாருக்கான் விற்பனை செய்து விட்டார். தற்போது இரண்டாவது உரிமையாளரிடம் உள்ள அந்த கார் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
2010ம் ஆண்டு மாடல் காரான இது, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளது. ‘0555’ என்ற உண்மையான பதிவு எண்ணை அந்த கார் தாங்கி நிற்கிறது. கடந்த காலங்களில் இந்த காருடன் ஷாருக்கானை பல முறை பார்க்க முடிந்துள்ளது. ‘0555’ என்பது ஷாருக்கானுக்கு மிகவும் விருப்பமான பதிவு எண் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரின் மற்ற கார்கள் பலவும் இதே பதிவு எண்ணை தாங்கியுள்ளன.
ஷாருக்கானின் பிஎம்டபிள்யூ-7 சீரிஸ் காரை தற்போது கைவசம் வைத்திருக்கும் நபர் 24 லட்ச ரூபாய் விலை கோருகிறார். 10 ஆண்டுகள் பழைய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காருக்கு இது நியாயமான விலையாகவே தோன்றுகிறது. ஆனால் காப்பீடு மற்றும் அதுபோன்ற சில முக்கிய தகவல்களை விற்பனையாளர் குறிப்பிடவில்லை.

எனினும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் விற்பனையாளரை தொடர்பு கொள்ள முடியும். இந்தியா மற்றும் உலகம் முழுக்க பிரபலமான மனிதர்கள் பலரின் முதன்மையான தேர்வாக பிஎம்டபிள்யூ 740Li இருக்கிறது. இந்த காரின் கேபின் மிகவும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அட்டகாசமான வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் வயது 10 என்றாலும் கூட, இந்த காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை கூற ஒரு பட்டிலேயே தயார் செய்ய வேண்டும். இந்த காரில் 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் வெளிப்படுத்தும். புகைப்படங்களை வைத்து பார்க்கையில் இந்த கார் நல்ல நிலையில் இருப்பது போலவே தெரிகிறது.

10 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட, இந்த கார் இன்னும் நீடித்து உழைக்க கூடியதாகவே இருக்கிறது. ஆனால் இதுபோன்ற கார்களை பராமரிப்பதற்கு நீங்கள் அதிகம் செலவிட வேண்டியது வரலாம். இந்த கார் விற்பனை குறித்து வாசிம் கான் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.