பிரதேசசபையின் தலைமைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்கிறார் தலைவர் ச. தணிகாசலம்

வவுனியா வடக்கு பிரதேசசபையின் தலைமைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என பிரதேசசபையின் தலைவர் ச. தணிகாசலம் தெரிவித்துள்ளார்.


இன்று வவுனியா வடக்கு பிரதேசசபையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரதேசசபையின் உறுப்பினராக இருக்கின்ற சஞ்சுதன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு கடந்த 13 ஆம் திகதி எமது சபை அமர்வு இடம்பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தலைவரான எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் எமது பிரதேச மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தேசியம் பேசுகின்ற அல்லது அதனைப்பற்றி பேசுகின்றவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.


இந்தவகையில் அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட விடயமாக சபையை கொண்டு நடத்தக்கூடிய தகுதியீனம் காரணமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தவிசாளரின் எண்ணங்களில் விடாப்பிடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவின் கீழ் இவர்கள் இந்த கோரிக்கையின் பிரகாரம் இதனை நிறைவேற்றுவதற்கு தகுதியில்லை என நம்புகின்றேன். எனவே இவ்வாறான நடவடிக்கையை ஒரு தவிசாளர் கொண்டிருப்பாராக இருந்தால் அதனை மாகாண உள்ளுராட்சி ஆணையாளரிடம் அல்லது ஆளுனரிடமோ அமைச்சரிடமோ முறையிட முடியும் என கூறவிரும்புகின்றேன்.
அத்துடன் வட மாகாணத்தில் பல உள்ளுராட்சி மன்றங்களில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்படும் நிலை காணப்படுகின்றது. இது அந்தந்த பிரதேச நலனுக்கு உகந்ததல்ல.


இந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேசசபையிலும் தலைவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அது சபையில் அதிகளவான எதிர்தரப்பு அங்கத்தவர்களை கொண்டிருக்கும் சிங்கள பிரதிநிதிகள் பக்கம் தலைமைத்துவம் செல்லும் என்பது மறுப்பதற்கில்லை.
எனவே இதனை அனைவரும் உணரவேண்டும் என தெரிவித்தார்.