பிஎஸ்6 இருசக்கர வாகனங்களின் விற்பனையில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்…

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடேட் நிறுவனம் இதுவரை பிஎஸ்6-க்கு இணக்கமான 11 லட்ச இரு சக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 11 லட்ச பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விற்பனை என்ற மைல்கல்லை முதல் நிறுவனமாக ஹோண்டா அடைந்திருப்பதை இந்த நேரத்தில் பதிவு செய்தாக வேண்டும். இந்த சாதனையை விரைவாக அடைந்ததற்கு ஆக்டிவா 6ஜி மற்றும் ஷைன் 125சிசி மோட்டார்சைக்கிள்கள் மிக முக்கிய பங்கு வகித்ததாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மாசு உமிழ்வு விதிக்கு விதிக்கப்பட்ட 2020 ஏப்ரல் 1 என்ற காலக்கெடுவுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே தயாரிப்பு மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி விட்டதாக ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் கடந்த நிதியாண்டிலேயே 6.5 லட்ச பிஎஸ்6 இருசக்கர வாகனங்களை விற்க முடிந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய வளர்ச்சியே ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை முன்னணி இருசக்கர வாகன ப்ராண்ட் ஆக முன்னுறுத்துகிறது.

இந்த சாதனை குறித்து இந்நிறுவனத்தின் சந்தை & விற்பனை பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், எங்கள் 11 மேம்பட்ட பிஎஸ்-6 மாதிரிகள் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வென்றது மட்டுமில்லாமல் பயணம் செய்வதில் ஒரு புதிய மகிழ்ச்சியை உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தனி பயன்பாட்டு வாகனங்களை அதிகளவில் தேர்வு செய்ய முன்வருவதாக கூறியுள்ள ஹோண்டா நிறுவனம் இதனை ஊக்கும்படுத்தும் வகையில் இணைய முன்பதிவு, ஆட்டோமொபைல் துறையிலேயே முதன்முறையாக 6-வருட உத்தரவாதம் மற்றும் கவர்ச்சிகரமான பொருளாதார திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

இதற்கிடையில் டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனையாகாத பிஎஸ்4 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முயற்சியாக பயன்படுத்தப்படாத வாகன பிரச்சாரத்தை சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, ஓடோமீட்டரில் 0 கிமீ அளவுடன் உள்ள ஹோண்டா இருசக்கர வாகனங்களை தள்ளுப்படி விலையில் வாங்கலாம்.

11 லட்ச பிஎஸ்6 இருசக்கர வாகனங்களின் விற்பனையை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முதல் ஆளாக பூர்த்தி செய்திருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் பிஎஸ்6 வாகனங்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 1 வருட அனுபவத்தை இந்நிறுவனம் பெறவுள்ளது.