பாலியல் வன்கொடுமை செய்து பிளாக்மெயில்: தற்கொலை செய்துகொண்ட சிறுமி: பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!

தெற்காசியாவில் சிறுபாண்மையினர்கள் மீதான தாக்குதல் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இங்குள்ள சிறுபாண்மையின மக்கள் அதிக அளவில் அங்குள்ள பெரும்பான்மையின மக்களால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் பெரும்பான்மையாக பெண்கள் அதிக அளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். சொந்த நாட்டில் பாதுகாப்பின்மை காரணமாக ஏராளமான மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இதனிடையே அந்நாட்டின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள தலன்-ஜோ-டார் நகரில் வசித்து வரும் 17 வயது சிறுபான்மையின சிறுமி ஒருவர், கடந்த ஆண்டு 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர். முன்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது அதனை வீடியோ எடுத்திருந்த அந்த இளைஞர்கள், அதை வைத்து சிறுமியை பிளாக் மெயில் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையுற்ற அந்த சிறுமி நேற்று அக்கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


இது குறித்து தெரிவித்துள்ள அந்நகர காவல்துறை எஸ்.பி அப்துல்லா அகமதியார், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது முதல்கட்ட  மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் சாலையில் குழந்தைகளுடன் சென்ற பெண்ணை இளைஞர்கள் கொடூரமாக கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் இந்த நிலையில் மேலும் ஒரு சிறுபான்மையின சிறுமி இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.