பாராளுமன்றில் மக்களின் தேவைகளை பேசுங்கள்

பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை பேசவேண்டும். இல்லாவிடில் வீட்டில் இருக்கவேண்டிவரும் என்று சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான அமைப்பாளர் தமிழ்த்திரு அ.மாதவன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வடகிழக்கில் பலரது பாராளுமன்ற கதிரைகள் இல்லாமல் போயிருக்கின்றது. அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகள் பல இருக்கின்றது.பல அபிவிருத்திகள் தடைப்பட்டிருக்கின்றது. 
காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் வீதிகளிலேஇருக்கின்றனர். சிறைகளிலே தமிழ் இளைஞர்கள்வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இவற்றுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் எதற்காக பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பது எமது கேள்வியாக இருக்கின்றது.
உங்களுடைய அற்பசொற்ப சலுகைகளிற்காகவும், அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை பெறுவதையும் நோக்கமாககொள்ளாமல் மக்கள் உங்களை அனுப்பியதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது உங்களுக்கு பாராளுமன்றம் செல்லகூடிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. மக்கள் உங்களை ஆதரித்திருக்கின்றார்கள். எனவே இந்தப்பயணத்திலாவது மக்களின் தேவைகளை பேசுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். இந்த 5 வருடங்களில் மக்களின் பிரச்சினைகளை நீங்கள் தீர்க்காவிட்டால் அடுத்தமுறை நீங்கள் வீட்டில் இருக்க வேண்டிவரும் என்பதை இந்த தேர்தலின்ம மூலம் மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர்.
எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பது எமது வேண்டுகோளாக இருக்கின்றது என்றார்.