பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அத்வானி உள்ளிட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்து, ரேபரேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு  லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லக்னோவில் உள்ள, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எஸ்.கே. யாதவ், இன்று தீர்ப்பளிக்க உள்ளார். தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதுமை காரணமாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.