பாடசாலைகள் கொரோனா அச்சம் காரணமாக பூட்டு – கல்வி அமைச்சு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதற்கமைய குறித்த மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரத்துக்கு மூடப்படவுள்ளது.

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த பெண், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால், கம்பஹா வைத்தியசாலையில் பணிப்புரிந்த 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையிலேயே குறித்த பெண் பணி புரிந்து வந்துள்ளமையினால் குறித்த ஆடை தொழிற்சாலைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.