பள்ளி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்!

குத்தாலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் தங்கி 10-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது, சக மாணவியின் உறவினரான மெல்வின் செல்வகுமார் என்பவர், அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். பின்னர், அந்த சிறுமி சொந்த ஊருக்கு சென்று அங்கேயே படிப்பை தொடந்துள்ளார். இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில், சிறுமியின் படத்தை அனுப்புமாறு மெல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார். அதற்கு சிறுமி மறுத்ததால் தன் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து அதை அந்த சிறுமிக்கு அனுப்பியுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தனது புகைப்படங்களையும், செல்ஃபிகளையும் செல்வகுமாருக்கு அனுப்பியுள்ளார். மேலும் வீடியோவும் அனுப்பியுள்ளார். இப்படியே சில நாட்கள் சென்றுக்கொண்டிருக்க திடீரென சிறுமியிடம் ஆடைகளின்றி புகைப்படம் அனுப்புமாறு கேட்டுள்ளார். சிறுமியும் மெல்வின் செல்வகுமாரை நம்பி, அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் சிறுமியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஒருவர், சிறுமியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவுவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பெற்றோரிடம் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் அவர்கள் புகாரளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மெல்வின் செல்வகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.