பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை!

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் இறுதிக்குள்ளாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பின்னர் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என மாநில உயர்கல்வித்துறையும் அறிவித்திருந்த நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளன.

இதனிடையே, ஆன்லைன், ஆஃப்லைன் என எந்த முறையில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தினாலும், அதற்கு முன்னர் மாநில அரசிடம் இருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி அரசிடம் விளக்கி, அரசின் அனுமதியைப் பெற்ற பின்னரே தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சில பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.