பருவநிலை மாற்றத்தால் நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.