பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்!

நாடு வழமைக்கு திரும்பியதும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

குறித்த தீர்மானம் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

இதன்படி இலங்கை செயற்படாவிட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாக மீண்டும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிவிவாகர அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை அழைக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.