பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளை முடக்கிய மத்திய அரசு!

கல்வான் மோதலையடுத்து சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில் மேலும் 118 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதில் பிரபல மொபைல் கேமிங் செயலியான PUBG, Baidu, CamCard Business Card Reader, WeChat reading, Tencent Weiyun உள்ளிட்டவை அடங்கும்.

இந்த செயலிகள் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதாகவும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்திய சைபர் கிரைம் மையம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மொபைல் செயலிகள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களிள் தரவுகள் மற்ற நாடுகளுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.