பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு, மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். 44 வயதான இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். மருத்துவப் படிப்பு படிக்காமலே, அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஊசி போட்டு போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். 

அதேபோல சிதம்பரம் அருகே விபீஷ்னபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானம். 63 வயதான இவர் வடக்கு வடுக தெருவில் மருத்துவமனை வைத்துக்கொண்டு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போட்டு வைத்தியம் பார்த்து உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் அவரையும் கைது செய்து அவரிடம் இருந்து மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் கைப்பற்றினர். சிதம்பரம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.