பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக சோனு சூட் நியமனம்!

பஞ்சாபில் பிறந்த நடிகர் சோனு சூட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் வில்லனாக நடித்த அவர், கொரோனா காலத்தில் ரியல் ஹீரோவாக வளர்ந்தார். ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப உதவி செய்தார். அதோடு நின்றுவிடாமல், சமூக வலைதளத்தில் தன்னிடம் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். கல்வி, மருத்துவம் என அவரது சேவை நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சோனு சூட்டை பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என அம்மாநில தேர்தல் தலைமை அதிகாரி கருணா ராஜூ, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.