நெட்ஃப்ளிக்ஸின் பங்குகளின் மதிப்பு 50 சதவீதம் உயர்வு!

ஏப்ரல்-ஜூன் வரையில் மட்டுமே, Netflix-இல் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரை, Netflix-இல் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் 1 கோடி சந்தாதாரர்கள் என்பது வழக்கமாக நெட்ஃப்ளிக்ஸில் இணையும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும்.

கொரோனா நெருக்கடி காரணமாக பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜூன் மாதம் முடிவில் உலக அளவில் Netflix-இல் சந்தா செலுத்தியுள்ளவர்கள் எண்ணிக்கை மொத்தம் 19.3 கோடி என்ற அளவில் உள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்கள்.

Netflix-இன் மொத்த சந்தாதாரர்களில் 2.6 கோடி பேர், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இணைந்தவர்கள்.

இது கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் தொடக்கத்தின்போது இந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் இருந்த வேகம் இப்போது குறைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 11-ம் தேதி ஆரம்பித்து இன்றுவரை நெட்ஃப்ளிக்ஸின் பங்குகள் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.