நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்த தந்தை – மகனின் சடலங்கள் கண்டெடுப்பு!

பதுளையின் ஹல்துமுல்ல பகுதியில் வெலிஓயாவில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று வெலிஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது, நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர்களின் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, மஹரகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பதுளைக்குச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இதன்போது குறித்த நால்வரில் இருவர் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனைய இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், 52 வயதுடைய ஒருவரும் அவருடைய மகனுமே (17 வயது) இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.