
நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளிட்ட நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை எற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்து.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையிம், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. மேலும் நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் இருக்கிறது. அதோடு, நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.