நாட்டை மோசமான நிலைக்கு 20ஆவது திருத்தம் கொண்டு செல்லும்- அநுர

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டை மோசமான நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

எமக்கு , இந்த விடயங்களில் எந்ததொரு நம்பிக்கையும் இல்லை. இந்த நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினை  அரசியலமைப்பாகும்.

மேலும் மக்களின் வாழ்வாதாரம், நீதியை பெற்றுக்கொள்ளும் விடயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு ஊடாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்குமென்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த அரசியலமைப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அனைவரும் குறித்த சட்டத்தின் கீழ் அடிபணிந்து செயற்பட  வேண்டும்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கே அதிகளவு அதிகாரம் காணப்பட்டது. ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படவில்லை.

ஆனால் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற விவகாரங்களில் ஜனாதிபதிக்கே அதிகளவு அதிகாரம் காணப்படும்.

அனைத்து நிறுவனங்களின் அதிகாரங்களையும் 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியே கையாளக்கூடிய நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், 20 ஆவது திருத்தத்தின் மூலம், இந்த அரசாங்கம் மீண்டும் நாகரிகத்திலிருந்து மோசமான நிலைக்கு செல்ல முயற்சிக்கிறது.

எங்களுக்குத் தெரியும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அதன் ஆணைக்குழுக்களின் செயற்பாடு, மக்கள் எதிர்பார்த்த  விடயங்கள் தோல்வியுற்றது, அதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒரு அரசாங்கம் சமுதாயத்தை நாகரிகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், அந்த சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்துவது அல்லது பிற நிறுவனங்களை இயக்குவது பற்றி ஏதாவது செய்திருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.