நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் முதல் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட 5 ஆயிரத்து 715 குடும்பங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தோடு, நோயாளிகளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளாக கண்டறியப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 6 ஆயிரத்து 199 குடும்பங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இன்று முதல் இந்தக் குழுக்கள் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர் என்றும் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.